Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 13







காலில் திராவகத்தை ஊற்றியது போல் எரிந்தது ."அம்மா "வலியில் முனகினாள் சபர்மதி .


" மருந்து முதல்ல தடவும்போதுதான் எரியும் .அப்புறம் சரியாயிடும் சபர்மதி " அனுசூயாவின் குரல் .


கண்களை திறக்க மனமின்றி மூடியே கிடந்தாள் சபர்மதி .லேசாக அசைந்தாலும் இடுப்பு வலித்தது .கை கால்களுக்கு மருந்து தடவி விட்டு அவளை மென்மையாக திருப்பி இடுப்பு காயத்திற்கும் மருந்திட்டாள் அனுசூயா .


மெல்ல விழிகளை திறந்து அவளை நோக்கினாள் சபர்மதி ." இப்போ எப்படி இருக்கு சபர்மதி ?"...


"ம் " தலையாட்டினாள் .


" சபர்மதி அவர் குழந்தை மாதிரி நீ அவரை தப்பா எடுத்துக்கலியே " தயங்கியபடியே கேட்டாள் .


இல்லையென தலையசைத்தாள் சபர்மதி .


"என்னோட தப்புதான் அவரை உனக்கு அறிமுகப்படுத்தியிருக்கனும் .மெல்ல பாத்துக்கலாம்னு நான்தான் விட்டுட்டேன் .அப்புறம் நேற்று இரவுதான் பெரிய கலாட்டா பண்ணி தப்பி ஓட பார்த்தார் .அவரை சாந்தமாக்க மருந்தெல்லாம் நேற்றே கொடுத்திருந்தோம் .அது ஒரு வாரமாவது அவரை கட்டுக்குள் வைத்திருக்கும் .அதனால் மீண்டும் இன்றே அவர் திரும்ப ஓட முனைவார்னு நாங்க எதிர்பார்க்கவில்லை " என்றாள் வருத்தத்துடன் .


"விடுப்பா இதில் உன்னோட தப்பு என்ன இருக்கு .எனக்கு இப்படி படனும்னு இருக்கு " எனக் கூறி அவளை தேற்றினாள் சபர்மதி .


" சரி எல்லா காயத்திற்கும் மருந்து போட்டுட்டேன் .நீ கொஞ்சம் ஓய்வெடு .நான் அவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு உனக்கு சாப்பாடு எடுத்திட்டு வர்றேன் ."என்றுவிட்டு சென்றாள் .


அந்த அறை முன்பு சபர்மதி தங்கியிருந்த அறை இல்லை .இது பெரியதாக சற்று நவீனமாக குளிர் சாதன வசதியுடனிருந்தது .ஓரத்தில் கதவை பார்த்தவளுக்கு அது குளியலறை என புரிய மெல்ல எழுந்து அதனை நோக்கி நடந்தாள் .

நான்கு எட்டு எடுத்து வைக்கும் முன் கை கால்களெல்லாம் ஓய்ந்து வந்தது .இடுப்பு விண்விண்ணென தெறிக்க தொடங்கியது .மீண்டும் கட்டிலுக்கே போய்விடலாமா என திரும்ப எண்ணியபோது கால்கள் இடற கீழே விழ தொடங்கியவள் அணைத்து நிறுத்தப்பட்டாள் .பூரணசந்திரனால் .


"இப்போ எதற்கு படுக்கையிலிருந்து எழுந்தாய் ?"..அதட்டினான் .


"பாத்ரூம் "மெல்லிய குரலில் கூறினாள்


" ஓ..இந்த அனுசூயாவை எங்கே ? உன்கிட்டவே இருக்க சொன்னேனே ." என்றவன் அவளை கூப்பிட முனைய " இல்லை அவள் சாப்பாடு கொடுக்க போறேன்னு சொல்லிட்டுத்தான் போனா " என்றாள் சபர்மதி .


" சரி உனக்கு ஆட்சேபம் இல்லையென்றால் ...." என்றவன் அவள் சுதாரிக்கும் முன் அவளை பூச்சென்டாக அள்ளிக்கொண்டான் .

குளியலறையின் உள்ளே மென்மையாய் இறக்கி விட்டவன் " கூப்பிடு " என்றுவிட்டு கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றான் .


முன்பின் அனுபவித்தறியா இக்கரிசனத்தில் சபர்மதியின் உள்ளம் நெகிழ்ந்தது 

.குளியலறை விட்டு வெளியே வந்தவளை அவள் மறுக்கும் முன் மீண்டும் ஏந்தி கட்டிலில் மென்மையாக கிடத்தினான் .முகத்தை மறைத்த முடியை ஒதுக்கி விட்டவன் அவளருகே அமர்ந்து அவள் கண்களுக்குள் பார்த்தான் .


ஏதோ சுழலுக்குள் அமிழ்வது போல் உணர்ந்த சபர்மதி கண்களை இறுக மூடி தலையை திருப்பிக்கொண்டு , " எனக்கு தனிமை வேண்டும் .தயவுசெய்து வெளியே போகிறீர்களா ? " என்றாள் .

அவன் வெளியேறியதை உணர்ந்ததும் கலங்க தொடங்கிய கண்களை அதட்டி அடக்கினாள் .இல்லை நான் நெகிழக்கூடாது .என் வாழ்நாளில் நான் சந்திக்க விரும்பாத ஒரே நபர் என் தகப்பன்தான் .அவர் இடத்திலேயே என்னை வேறு வழியின்றி இருக்கச்செய்திருக்கிறான் .இந்த நிலைமை என் நெஞ்சை அறுக்கிறதே .அதை நான் உணராமலிருக்கவே எனக்கு இந்த பரிவு .இது போன்ற நிகழ்வுகளை இனி அனுமதிக்க கூடாது .


இப்படி எண்ணியபடியே படுத்து கிடந்தாள் .அனுசூயா வந்து உணவு தந்து மாத்திரை விழுங்கியதும் தூக்கம் கண்களை சுழற்ற ஆழ்ந்து உறங்கத்தொடங்கினாள் .


"  இந்த நிலைமையில் இருக்கும்போதும் வந்து பார்த்துதான் தீரணும்னு என்ன இருக்கு ?" அம்சவல்லியின் குரல் எங்கோ கனவில் போல் கேட்டது .


"ஷ் அக்கா மெல்ல அவள் தூங்குகிறாள் ." பூரணசந்திரன் குரல் .

"ஒரே ஒரு தடவை பார்த்து விட்டு போய் விடுகிறேன் " அந்த ஆள் அதுதான் அவள் அப்பாவின் குரல் .

கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்கும் பாவனையை தொடர்ந்தாள் சபர்மதி .சக்கரநாற்காலியில் உட்கார வைத்து அவரை கூப்பிட்டு வந்திருப்பார்கள் போலும் .உருளும் சத்தம் கேட்டது .


" போதும் போதும் . .தம்பி அவரை கூட்டிக்கொண்டு போ .மகளை பார்த்ததும் அப்பனுக்கு அப்படியே பொங்குது .இந்த மூதேவியை கூட்டி வந்து நடுவீட்டில் வைத்துக்கொண்டு என் உயிரை வாங்குகிறார் "


" அமசா " ..."அக்கா " கண்டிக்கும் வகையில் இரு ஆண்களின் குரலும் ஒரே நேரத்தில் ஒலித்தது .


" போதும் அம்சா , ஏற்கெனவே இவள் அம்மாவிற்கு நான் செய்த பாவத்தின் பலனைத்தான் இன்று நம் குடும்பம் அனுபவித்து கொண்டிருக்கிறது .இன்னும் இவளை வேறு திட்டி அந்த பாவத்தையும் சேர்த்து கொள்ளாதே .
என் பொண்ணு மகாலட்சுமி.நீ வேணும்னா பாரு இவளால்தான் நம் குடும்பமே இப்பொழுது இருக்கின்ற இந்த கொடுமையான நிலையிலிருந்து வெளி வரப்போகுது ."சத்யேந்திரனின் குரலில் பெருமிதம் ஒலித்தது .


" யாரு இவளாலா ? இந்த அம்மா மங்கையர்க்கரசி வந்து என் குடும்பத்தை தூக்கி நிறுத்த போறாளாக்கும் .தத்தளித்துக் கொண்டிருந்த இந் த குடும்பத்தை இரண்டு வருடமாக தாங்கி நிறுத்திக்கொண்டு இருப்பவன் என் தம்பி பூரணன் .அது நினைவிருக்கட்டும் "


காலங்காலமாக பெண்களுக்கு இருந்து வரும் பிறந்தவீடா ,புகுந்த வீடா பிரச்சினை ...


" அக்கா கொஞ்சம் பேசாமல் இருக்கிறீர்களா ? மச்சான் நீங்களும் தான் ....வாருங்கள் வெளியே போகலாம் .தூங்குபவளை தொல்லை செய்துகொண்டு ...." என்றபடி இருவரையும் அழைத்து கொண்டு வெளியேறினான் பூரணசந்திரன் .


கண்களை இறுக மூடி படுத்தபடியே யோசித்தாள் சபர்மதி .இவர்களது பேச்சில் எனக்கான  ஒரு செய்தி இருக்கிறது .இனி நான் செய்ய வேண்டியதையும் அதுதான் கூறப்போகிறது .எப்படி ...யோசிக்க வேண்டும் .


அன்று முழுவதும் படுக்கையில் இருந்து நன்கு ஓய்வெடுத்து கொண்டாள் .மறுநாள் காலையில் எழும்போதே நன்கு குணமாகியிருந்த  உடல்நிலையை உணர முடிந்தது .காயங்களின் வலி குறைந்து நன்கு நடக்க முடிந்தது .அதிகாலை ஆறுமணிக்கே விழிப்பு வந்து விட ,எழுந்து ஹீட்டர் போட்டு விட்டு பல் தேய்த்தாள். சுடு தண்ணீரில் குளித்தவுடன் மேலும் உடம்பு லேசானது .


அவளுக்கு தரப்பட்ட அந்த அறை மாடியில் இருந்தது .  வெளியே வந்தவள் அருகில் ஏதோ சத்தம் கேட்டு நிதானித்தாள் .இரண்டு அறை தள்ளி கேட்டது .

"ஏய் மெல்ல ...வலிக்குதே ..." தர்மசேகரனின் குரல் ." இதோ முடிஞ்சது " அனுசூயாவின் பதில் குரல் .

மெல்ல எட்டிப்பார்த்தாள் சபர்மதி .தர்மசேகரன் ஒற்றை சோபா ஒன்றில் அமர்ந்திருந்தான் .முகத்தை மறைத்தபடி அன்றைய செய்தித்தாள் .பேப்பர் படிக்கிறானாம் .எதிரே தரையில் அமர்ந்திருந்தாள் அனுசூயா .தர்மனின் கால்களை தனது மடியில் தாங்கி அவனுக்கு நகம் வெட்டி விட்டுக்கொண்டிருந்தாள் .


ஒழுங்காக கால்களை கொடுக்காமல் ஆட்டிக்கொண்டே இருந்து "வலிக்கிறது ' என அவளை காய்ந்து கொண்டிருந்தான் தர்மசேகரன் .

" அனு. ..இன்னைக்கு பேப்பர் படித்தாயா ?"

" இல்லை...நீங்கள் கொஞ்சம் காலை ஆட்டாமல் வைத்திருங்கள் "

" இன்று  மகளிர் தினமாம் .பேப்பர்ல போட்டிருக்கான் "

பத்தியமிருந்து சுமந்தாய் 
வலியெடுத்து பெற்றாய் 
உறக்கமின்றி வளர்த்தாய் 
உயர் படிப்பு நான் படிக்க 
உன் கழுத்தில் வெறுமை 
உள்ளமட்டும் உனை கொடுத்து விட்டு 
பொறுப்புதனை கொடுத்தாய் 
என் மனைவியிடம் 
அவள் மீண்டும் 
சுமப்பாள் ...பெற்றெடுப்பாள் 
தனை கரைப்பாள் 
உங்களுக்காக வேறொன்றும் 
செய்ய முடியாது 
இந்த நாளையாவது 
கொண்டாடி விட்டு போகிறேன் 
மகளிர் தினமாக .

இந்த கவிதை போட்டிருக்கான் .நல்லாயிருக்கில்ல ...."


"ம் " மட்டும் கொட்டினாள் அனுசூயா .


இதுல சொல்லியிருக்கிறதெல்லாம் அப்படியே உண்மை .ஆண்களுக்காக பெண்கள் எல்லாரும் எவ்வளவு தியாகம் பண்றீங்க .பதிலுக்கு நாங்க ஆண்கள் உங்களுக்கு என்ன பண்றோம் .மிஞ்சி போனா இரண்டு சேலை வாங்கி கொடுப்போம் ...என்ன "


" ம் ...ஆமாமா ...நீங்க கொஞ்சம் காலை நேரே வைங்க "அவள் நகம் வெட்டுவதிலேயே கவனமாக இருத்தாள்


`சபர்மதிக்கோ ஒரே ஆச்சரியம் .எவ்வளவு தெளிவாக பேசுகிறான் இவனுக்கு மனநிலை  சரியில்லையென்று கூறினால் யாராவது நம்புவார்களா ?...ம் ....நான் கூட இப்படித்தானே ஏமாந்தேன கசப்படன் தனக்குள் எண்ணிக்கொண்டாள் .


" நான் என்ன சொல்கிறேனென்றால் பெண்கள் ஆண்கள் சொல்வதைக்கேட்டு அவர்களுக்கு அடிமையாக இருக்ககூடாது .எத்தனையோ பெண்கள் அடி வாங்கிக்கொண்டும் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கின்றனர் .ஒருநாள் அவர்கள் திரும்பி அடிக்க தொடங்கினால் ....." பேசியபடியே இருந்தவன் திடீரென பளாரென அனுசூயாவை அறைந்தான் .


" வலிக்குதுன்னு சொல்ல சொல்ல கேட்காமல் ....."
அவன் அறைந்த அறையில் நகவெட்டி சிதற கீழே விழுந்திருந்தாள் அனுசூயா .

"இல்லைங்க நீங்க காலை அசைத்துக்கொண்டே .... "பேசாதே ...என்றபடி அவளை உதைப்பதற்காக காலை உயர்த்தினான் .


" தர்மசேகர் நில்லுங்கள் .." அதட்டியபடி உள்ளே நுழைந்தாள் சபர்மதி .அவளைக்கண்டதும் தர்மனின் முகம் மாறியது .


" ஐ...சபர்மதி வா ...வா ...எப்படியிருக்கிறாய் ...காயமெல்லாம் ஆறிவிட்டதா ...உன்னை பார்த்ததும் ஏதோ கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேனே ...." ஆட்காட்டி விரலால் நெற்றியை தட்டிக்கொண்டான் .

அனுசூயாவை திரும்பி பார்த்தவன் " ஏன் அனு என்ன சொன்னா....அடடா ...கீழே விழுந்து விட்டாயா ...எழுந்திரு , இப்படி உட்காரு " கைகொடுத்து எழுப்பி சோபாவில் அமர வைத்தான் .


கூடவே சபர்மதியின் கைகளையும் பற்றியிழுத்து அனுசூயாவின் அருகேயே அமர வைத்தவன் , இருவர் எதிரிலும் தரையில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டான் .


" நீங்கள் இருவரும் என்னை மன்னிப்பீர்களாக " தலை குனிந்து கேட்டான் .


பின் எழுந்து நின்று " ஏய் மன்னிப்பு கேட்டுட்டேன் , அனு நீ சொன்னமாதிரி மன்னிப்பு கேட்டுட்டேன் .உன்கிட்டயும் கேட்டுட்டேன் " சிறுகுழந்தையாக கைகளை தட்டி ஆர்ப்பரித்தான் .

முந்தையய இரவு சம்பவத்திற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்க அனுசூயா பழக்கியிருக்கிறாள் என ஊகித்தாள் சபர்மதி .


சிறிது சங்கடத்துடன் தன்னை நோக்கிய அனுசூயாவின் கைகளை லேசாக புரிந்து கொண்டேன் எனும்படி தட்டிக்கொடுத்து விட்டு , பார்த்து கொள் என ஜாடை செய்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் .

ஒரு காபி வேண்டும் போலிருக்க சமையலறையை நோக்கி சென்றாள் அங்கே .....குக்கரில் ஏதோ சத்தம் கொடுத்து கொண்டிருக்க ,காய்ச்சுவதற்காக ஒரு அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி அடுப்பை அணைத்துவிட்டு தரை முழுவதும் பரவியிருந்தது.காவேரியை காணவில்லை .

அடுப்பை அணைத்துவிட்டு " காவேரி .." என குரல் கொடுத்தாள் .


சமையலறையின் ஓரத்தில் இருந்த இன்னொரு அறைக்குள் எட்டிப்பார்த்தாள் .சமையலுக்கு தேவையான அரிசி ,பருப்பு போன்ற மளிகை சாமான்கள் அங்கே சேமிக்கப்பட்டிருந்தன .அவற்றின் பல மூட்டைகள் பிரிக்கப்பட்டு அப்போதுதான் எடுக்கப்பட்ட தடங்கள் தெரிந்தன .வழி நெடுக சிந்திக்கிடந்த பொருட்களை தொடர்ந்தால் ,அவை அந்த அறையின் அடுத்திருந்த வாசலை காட்டின .


இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா ...எனும் குரல் அங்கே கேட்டது .காவேரிதான் .யாரோ ஒரு பையன் .இருபத்தியிரண்டு வயதிருக்கலாம் .பேச்சை வைத்து பார்த்தால் காவேரியின் மகன் போல் தெரிந்தது .அவன் முன்  பெரிய இலை விரித்து சோற்றினை குவித்திருந்தாள் .இலை ஓரத்தில் கோழி ,ஆடு ,என அசைவ வகைகள் .


" காலையிலேயே இவ்வளவும் சமைச்சிட்டியாம்மா ...."
பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி உள்ளே தள்ளியபடி கேட்டான் அவன் .

" உனக்காகத்தான்டா காலையிலேயே எழுந்திரிச்சி செஞ்சேன் .நல்லா சாப்பிடு .அடுப்புல புறாகுழம்பு வச்சிருக்கேன் .ஒரு தூக்குசட்டில ஊத்தி தர்றேன் .வீட்டுக்கு கொண்டு போய் நீயும் தங்கச்சியும் சாப்பிடுங்க .இந்த சாமான்களையெல்லாம் வழக்கம் போல் செட்டியார் கடையிலேயே கொடுத்திடு .அம்மா இந்த மாத கடைசில வரும்போது கணக்கு கேட்டு வாங்கிக்கிறேன் .சாப்பிட்டு முடி ...பாலை சுட வச்சுட்டு வந்தேன் .காபி கலந்து எடுத்திட்டு வர்றேன் "


நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டு உள்ளே திரும்பினாள் .சபர்மதி அவள் கண்களில படாமல் சமையலறைக்கு வெளியே வந்துவிட்டாள் .


ஹாலில் வந்து அமர்ந்து பேப்பரை கையில் எடுத்தாள் .முழு அலங்காரத்துடன் கீழே வந்தாள் அம்சவல்லி .சபர்மதியை கடக்கும் போது ஓரக்கண்ணால் ஒரு பார்வையை வீசி விட்டு தோள்பையை ஒரு சுழற்று சுழற்றி தோளில் மாட்டிக்கொண்டாள் .அவளை கவனிக்கவில்லையாம் 

" காவேரி ...டிபன் எடுத்து வை ...."கத்தியபடி  உணவு மேஜையில் அமர்ந்தாள் .


தலையை சொறிந்தபடி வந்து நின்றாள் காவேரி ." என்னடி ..."

"அம்மா காலையிலிருந்து உடம்புக்கே சரியில்லம்மா .அதான் ஒண்ணும் சமையல் பண்ணலை .உங்களுக்கு வேணும்னா உப்புமா கிண்டி தரவா ..."


" என்னது உப்புமாவா ...நேற்று கோழி ,ஆடுன்னு பெரிய பட்டியல் கொடுத்து சாமான் வாங்கிட்டு ....."


"அதெல்லாம் ப்ரிட்ஜ் ல் வச்சிட்டேன்மா .இன்னொருநாள் சமைச்சிடுறேன் . "


"ம் ...அப்போ மத்தவங்களுக்கெல்லாம் என்ன பண்ண போற ?"

" பெரியய்யாவுக்கும் ,பெரிய தம்பிக்கும் பத்திய சாப்பாடு தானுங்களேம்மா .அது நான் பாத்துக்கிறேன் .சின்னதம்பி என்ன கொடுத்தாலும் சாப்பிட்டுக்குவார் .சபர்மதி அம்மாவும் ....அனுசூயா அம்மாவும் ...." என இழுத்தாள்.


" அவளுகளும் என்ன கொடுத்தாலும் சாப்பிடுவாங்க , எப்படியும் மற்ற வேலைக்காரங்களுக்கு சமைப்ப இல்ல ....?"


" ஆமம்மா ...அதுக்கு உலக்கு அரிசி வச்சா போதும்மா .."


" ம் ...என்றவள் அதையே இவள்களுக்கும் போடு .நான் வர இரவு எட்டு மணியாயிடும் .சாப்பிட்டே வந்திடுவேன் .இங்கே நீ பார்த்துக்கோ " என்றவள் " டிரைவர் காரெடு " என்று காரிலேறி பறந்து விட்டாள் .


" ம்ஹும் ...நல்ல குடும்ப தலைவி ...." ஏளனமாக எண்ணிக்கொண்டாள் சபர்மதி .


அவளை லட்சியம் பண்ணாமல் காவேரி உள்ளே போய்விட்டாள் .வீட்டை சுத்தம் பண்ணும் பெண் டிவியில் ஆழ்ந்திருந்தாள் .தோட்டத்திற்கு வந்தாள் சபர்மதி .பவளமல்லிக்கு டியூப் வழியே தண்ணீரை திறந்து விட்டு ,அது நிரம்பி வழிய ,கவனிக்காமல் வாட்ச்மேனுடன் அரட்டையில் இருந்தான் தோட்டக்காரன் .


அம்சவல்லி வெளியேறிய பின் கேட் ஒழுங்காக பூட்டப்படாமல் திறந்தே கிடந்தது .தோட்டம் முழுவதும் பறந்த மயில்கள ்நிறைய மலர் மொட்டுகளையும் ,கனியும் முன்னே பிஞ்சுகளையும் கடித்து குதறி போட்டன .


சிந்தனையுடன் தோட்டத்தில் அங்குமிங்கும் நடந்தாள் சபர்மதி 

சத்யேந்திரனை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளியபடி பூரணச்சந்திரன் அவுட்ஹவுசிலிருந்து வெளியேறினான் .

சபர்மதியை கண்டதும் இருவருமாக தனக்குள் பேசியபடி அவளருகே வந்தனர் 

.'அதற்குள் ஏன் நடக்க ஆரம்பித்தாய் ' என்ற பூரணசந்திரனுக்கும் ...." இன்னும் ஒருநாள் ஓய்வெடுத்திருக்கலாமே அம்மா " என்ற சத்யேந்திரனுக்கும் ஒரே பதிலாக ....

"நான் இனிமேல் இங்கேயே தங்க முடிவு செய்துவிட்டேன் " என அறிவித்தாள் சபர்மதி .




- தேவதை வருவாள்.



1 comments:

  1. sababsh sariyana mudivuthan. oru kai paarthuvida mudivu seithuvittal sabarmathi. kaveriyin seyal enaku avai shnmugi padathai konjam gnabaga paduthiyathu. veetuku vanda mahalaxmi adhiradii inngings ada thayaragi vittal, ini sixer four parakuma, yaar adhil attathai izhakapokirargal, koodave wicket keeper aka pc, captain aka satyendran, slips anu. kalaku magale

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll