Pages

Powered by Blogger.

தவமான சாபம்


       தவமான சாபம்         






ஏதோ ஓர் விளங்கவியலா நறுமணம் அவ்விடத்தை சூழ்ந்திருந்தது .ஐம்பூதங்களால் அளவு தாண்டி ஆட்சியேற்ற முடியவில்லை அவ்விடத்தில் .


சூரியனின் வெம்மையற்ற ஒரு சுமூக வெம்மை அங்கே .ஆலயமொன்றின்
மூலஸ்தான துடிப்பு அப்பகுதியில் .


அவள் அங்கே இருந்தாள் .உடலை இறுக்கி இருந்தாள் .புலன்களை அடக்கியிருந்தாள் .கூந்தலும் இறுகி கறுத்து விரைத்திருந்தது .இமைகளில் அ சைவில்லை .நாசி மிக ..மிக மெலிதாய் இயங்கிக்கொண்டிருந்தது .


மொத்தத்தில் கல்லாய் சமைந்திருந்தாள் .


சற்றே தூரத்திலேயே அக்காலடி ஓசைகளை இனங்கண்டு கொண்டன அவளின் செவிகள் .சிறு பரபரப்பு அவளுடலில் .ஆனால் நிலைமையில் மாற்றமில்லை .


"ராமா அதோ அங்கே பார் ,....விசுவாமித்திரரின் குரல் ...


"ராமன் ...ராமன்.... எனில் எனக்கு விடிவுகாலம் வந்துவிட்டது .இனி நான் உணர்ச்சி பெறப்போகிறேன்"
அசையா உடம்புக்குள்ளே ஆயிரத்தெட்டு குதியாட்டங்கள் .



"யாரிவள் "வினவுகிறது தெய்வீக குரலொன்று ...


"...யார் ? ...நான் யார் ...?...அச்சிலை பாவை நினைவுகள் நழுவுகின்றன .


முத்கல முனிவர் ஆசிரமம் ....



யாகத்திற்கான சுள்ளி சேகரித்து கொண்டிருக்கிறாள் அவள் .அவள் கன்னி பருவத்திற்குள் காலடி வைக்கும் பருவத்தில் உள்ளாள் .மான்களும் ,மயில்களும் ,முயல்களும் அவளை சுற்றியே அலைந்து கொண்டிருக்கின்றன .அவள் பாதங்களை உரசியபடி குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன .அப்படி ஒரு பாவனையில் அவளை தொடலாமே என்ற எண்ணம் அந்த ஐந்தறிவு ஜீவிகளுக்கு ...


ஏனெனில் அவள் அவ்வளவு அழகாக இருந்தாள் .இப்புவனத்தின் அழகனைத்தையும் அலங்காரமாய் உடல் முழுவதும் சுமந்திருந்தாள் அவள் ...


அழகின்மை என்பதே துளியும் இல்லாதவள் எனும் பெயருடைய
அகல்யா ....அகலிகை....


மரமொன்றின் மேலே காய்ந்து தொங்கிய குச்சி ஒன்றினை எடுக்க நுனிக்கால்களில் அகலிகை முயலுகையில் ,பின்னிருந்து வலிய வடிவுடை கரமொன்று அவளுக்காக அக்குச்சி உடைத்தது .


உளம் கவர்ந்தவனின் உடல் ஸ்பரிசத்தில் மனமுவந்து திரும்பியவள் "அன்பே "என விளித்து ஆரத்தழுவினாள் .


"அதிதி குமாரா "


"அகலிகை "


தாகம் கொண்ட நதிகளிரண்டு தழுவி களைத்தன .


"எப்படி வளர்ந்துவிட்டாயடி நீ "
தன்னிலிருந்து விலக்கி நிறுத்தி அவளை தலை முதல் பாதம் வரை பருகுகிறான் அவன் .


"நீ மட்டும் என்ன ?வளர்ந்து யுவனாகியிருக்கிறாய் .என்னுடைய சிறு வயது விளையாட்டுத்தோழன் பெரியவனாகிவிட்டான் ."ஜலதரங்கமாய் நகைக்கிறாள் ஆரணங்கு .


ஒருவரையொருவர் தழுவியபடி அமராவதி ஆற்றங்கரையில் அமர்கின்றனர் .


"அதிதி குமாரா எப்போது என்னை மணக்க போகிறாய் ?ஒவ்வொரு மாரிக்காலமும் என்னை வாட்டுகிறதடா .உன்னால் ஒவ்வொரு மழைக்காலமும் தேகம் சுடா நெருப்பை தேகமெங்கும் சுமந்து திரிகிறேனடா .சொல் எப்போது என் இன்னல் தீர்ப்பாய் "


"கண்ணே என் யாக நெருப்பு நீயடி !,
உனை காக்கும் ரிஷி நான் .சாதாரண ரிஷி பத்தினி எனும் பேர் உனக்குகந்ததில்லையடி .நீ அம்பிகைக்கு இணையானவள் .உனக்கான இடம் இந்திராணி பதவிதான் கண்மணியே .இந்திர பதவியை அடைய கடும் முயற்சியில் இருக்கிறேன் .என் முயற்சி வென்று நான் இந்திரனானதும் உனை எனது நாயகியாக இந்திராணியாக்கி கொள்கிறேன் .சிறிது காலம் பொறுத்திரு செல்வமே "


காலடி ஓசைகள் இப்போது சமீபத்து விட்டன .தெய்வீக நறுமணம் சூழ்கிறது அங்கே .சிறு நூலிலையாக பெயருக்கு வெளியேற்றிக்கொண்டிருந்த தனது மூச்சை ,மாற்றி நாசி நிறைய மூச்சிழுத்து அம்மணம் உறிஞ்சினாள் அகலிகை .


நிலை குத்தி வைத்திருந்த தன் கண்ணிமைகளை சிறிது திருப்பி பார்த்தாள் .

"ஹா ...வ்"...


என்ன தெய்வீக களை .இதோ வந்துவிட்டான் அந்த தேவ குமாரன் என் குறை களைய ....


அவளை மீறி பாதக்குழி முதல் உச்சிக்குழி வரை சிலிர்க்கிறது அகலிகைக்கு ...
.

"அன்னையே !...ஆதூரமான அழைப்பு அத்தேவமகனிடமிருந்து ...


அம்மாவா ...நானா ...தன் தவமனைத்தையும் கைவிட்டு விம்முகிறாள் அகலிகை .


"என்ன நடந்தது தாயே ?...பரிவை மட்டுமே பூசிய குரல் குழைந்து வந்தது .




நடந்தது ...என்னவெல்லாமோ நடந்தது .இப்படியென குறிப்பிட வழியற்று ஏதேதோ நடந்தது 
.

மீண்டும் நினைவு சுழலுக்குள் சுழல்கிறாள் அகலிகை .


வினை முடித்த திமிரில் இந்திரனாய் தலை நிமிர்ந்து நிற்கிறான் அகலிகை மனம் கொண்டவன் .உடன் அனைத்து தேவர்களும் ,முனிவர்களும் .


தலைவனாய் பிரம்மன் .அருகில் கலக புத்தி நாரதன் .



"எனது திறமை முழுதும் பயன்படுத்தி நான் உருவாக்கிய தேவமகள் இவள் .அகலிகை .திருமண வயதை எட்டியிருக்கிறாள் .இவளை இந்திரனை மனதில் வைத்தே நான் உருவாக்கினேன் .எனவே இவளது அவதார நோக்கம் நிறைவேற இவளை இந்திரனிடம் ஒப்புவிக்க விழைகிறேன் "தந்தையின் பெருமித குரல் பிரம்மனிடம் .


எமன் ,வாயு ,அக்னி ,முதல் அனைத்து தேவர்களும் கௌதமன் போன்ற முனிவர்களும் பற்றி எரிகின்றனர் .இந்திரன் மீதுள்ள பொறாமையினாலும் ,அகலிகையின் அழகின் மீதுள்ள ஆசையினாலும் 
.

"அதெப்படி "...ஆட்சேபிக்கின்றனர் .

"இந்திரனுக்கு மட்டுமே உடைமையாக்கலாம் .போட்டியில் நாங்களும் இருக்கிறோம் .விதிகளை கூறுங்கள் .வென்றவருக்கே அகலிகை ..."கூச்சலிடுகின்றனர் .


இந்திரனுக்குமே இப்போட்டி  பிடிக்கிறது ."எப்போட்டியாயினும் எனை வெல்ல எவன் இருக்கிறான் .அனைவரையும் மண்ணை கவ்வ வைத்து என்னவளை உடமையாக்கி கொள்வேன் "


அளவற்ற கர்வம் கொப்பளிக்க நிற்கிறான் .


படைத்தவனுக்கோ தனது படைப்பு பொருளுக்கான போட்டி கண்டு ஏக பெருமை .


மகிழ்வாக தலையசைத்தபடி ,"அப்படியே ...எவனொருவன் இரண்டு தலை பசுவை கண்டுபிடித்து வலம் வருகிறானோ ,அவனுக்கே இப்பண்டம் "...


அவரவர் வாகனமேறி இரண்டு தலை பசுவிற்காய் பறக்க ...உறைந்து நிற்கிறாள் அகலிகை .


"என்ன சொன்னார் தந்தை ? பண்டமா ..?...நான் ...எனக்கு உயிரில்லையா ...?உணர்வில்லையா ...?...மனமில்லையா ...?தனக்குள் குமுறியபடி அவமானத்தால் கூசி நிற்கிறாள் அகலிகை 
.

கலக முனி நாரதன் கௌதமனுடன் ஓரம் ஒதுங்குகிறான் .


போட்டியில் முதலில் வந்தது கௌதமன்தான் .தான் பசு ஒன்று கன்று ஈனுகையில் பார்த்ததாகவும் ,அதுவே இரண்டு தலை பசுவெனவும்
நாரதனை சாட்சியாக்கி .


மற்ற தேவர்கள் அனைவரும் இரண்டு தலை பசுவை காணாமல் தோல்வியுடன் திரும்புகின்றனர் .


உணர்வனைத்தையும் உலையிலேற்றி விட்டு கௌதமன் மனைவியாகிறாள் அகலிகை .




"பாவிகளிடம் பரிவும் பச்சாதாபமும் ஆகாது ராமா "விசுவாமித்திரரின் குரல் அகலிகையை நடப்புலகுக்கு இழுத்து வருகிறது .


அகலிகை சிரிக்கிறாள் .


பல்லாண்டுகளாக தனக்குள் தன்னையே சுருக்கியபடி உயிரும் ,உணர்வும் அடங்கி கிடந்தவள் இன்று சிரிக்கிறாள் .


"மகனே யார் நீ ..?"...ராமனிடம் வினவுகிறாள் .


"தசரத குமாரன் தாயே "


"கௌசல்யை மைந்தனென்று கூறேன் "...


விதிர்விதிர்க்கிறான் ராமன் .


வினையமின்றி சிரிக்கிறாள் அகலிகை .


"தாயே "தழுதழுக்கிறான் ராமன் .


"பாவியா ..!நானா !.."விசுவாமித்திரரிடம் வினவுகிறாள் .


"மணாளனிருக்க வேறொருவனை மருவிய பாவி நீ "கண்களில் தீயெழுப்புகிறார் விசுவாமித்திரர் 
.

கொதிக்கிறாள் அகலிகை .


"எவன் மணாளன் ...என் உள்ளம் பற்றிய கவலையின்றி எனை கைப்பிடித்தவனா ?.இவன் பூஜைக்கு மலர் பறிக்கவும் ,யாகத்திற்கு சுள்ளி சேர்க்கவும் ஒரு மனைவி எதற்கு ...?சீடன் போதாதா ...?இவன் கண்ணசைவில் மட்டுமே கருத்தரிக்க நான் அடித்து வைத்த கற்சிலையோ ?மனைவியை மனைவியாய் நடத்தாதவனுக்கு கணவனென்ற தகுதி ஏது "...


" இந்திரனுடன் நீ கூடியது தவறு "...அடித்துரைத்தார் விசுவாமித்திரர் .


"அட மூட முனிவனே !....காதலில் ஏதடா தப்பும் தவறும் ...?எழுதப்படாத வெற்றோலையாய் இருந்த என் மன ஏட்டில் முதல் எழுத்தை பதித்தவன் இந்திரன் .என் கன்னிமையை தொட்ட முதல் ஆண்மகன் அவன் .அவன் ஆண்மையை அவனுக்கு உணர்த்திய முதல் பெண் நானே .


நானேதான் அவனை அழைத்தேன் .நானேதான் அவனை ஏற்றேன் .
நானேதான் எனை அளித்தேன் .


விருந்துக்கு இலை விரித்தவளும்  நானே .விருந்தானவளும் நானே .பரிமாறியபடியே பசியும் ஆறினேன்
 .

ஏன் ...?...எதனால் ...?


கணவனை மனைவி அழைக்க கூடாதா ....?


"என்ன கணவனா ..?வியப்புறுகிறார் விசுவாமித்திரர் .


"ஆம் ..என் கணவன் .இந்திரன் என் கணவன் .நான் இந்திராணி .உங்கள் சாஸ்திரங்களும் ,சம்பிரதாயங்களும் சொல்லிக்கொள்ளட்டும் நான் கௌதமன் மனைவி என்று .அன்றே அமராவதி நதிக்கரையில் பஞ்சபூதங்களை சாட்சியாக்கி நாங்கள் மணந்து கொண்டோம்."


"கௌதமனின் சாபம் என்னை ஒன்றும் செய்யாது .நானேதான் என்னை நானே சுருக்கிக்கொண்டு எனது நியாயத்திற்காக ,இந்த தெய்வ பிறவியின் வரவிற்காக வாக்கிற்காக  காத்திருந்தேன் "



தலை கவிழ்ந்து நிற்கிறார் விசுவாமித்திரர் .


ராமனுக்கு முனிவரின் தலை கவிழ்தழில் நியாயமிருப்பதாக தோன்றுகிறது .


மனம் நிறைய வாத்சல்யத்துடன் அகலிகையை நோக்கி ஆதரவு புன்னகை வீசுகிறான் கௌசல்யை மைந்தன் .


ஆதாரம் .

வால்மீகி இராமாயணம் .

பிரபஞ்சனின் பெண்மை வெல்க .

1 comments:

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll